பிறைத் தோற்றம்

1030.

செய்யொளிச் செக்க ரென்னுஞ் செம்புனல் பரந்து தேறி
2வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னு மணிகொள் பொய்கை
மையிரு ளென்னுஞ் சேற்றுள் வளர்திங்கட் கதிர்க ளென்னு
மொய்யிளங் கமல நாள வளையங்கண் முளைத்த வன்றே.

      (இ - ள்.) வெய்யொளி நிறைந்த நீல விசும்பென்னும் - வெவ்விய ஒளியான் நிறைந்த
நீலநிறமான விண் என்னும், மணிகொள் பொய்கை - அழகிய குளத்தின்கண்ணே,
செய்யொளிச் செக்கர் என்னும் - சிவந்த ஒளியுடைய செக்கர் வானம் என்னும் செம்புனல்
பரந்து தேறி - செவ்விய புதுப்புனல் பரவித் தெளிந்திட, மையிருள் என்னும் சேற்றில் -
அப்பொய்கைக்கண் உள்ள கரிய இருள் ஆகிய சேற்றின்கண்ணே வளர்திங்கட்கதிர்கள்
என்னும் - வளர்தலையுடைய திங்கள் மண்டிலத்தின் சுடர்களாகிய, மொய் இளம் கமல
நாளம் வளையங்கள் முளைத்த அன்றே - செறிந்த இளமையுடைய தாமரையின்
தாள்களையுடைய சுருள்கள் முளைப்பனவாயின அன்றே: அசை, (எ - று.)

தாமரை வளையம் - தாமரை யிலைகளின் சுருண்ட தளிர்கள் - அவை
வெண்ணிறமுடையன வாகலின் நிலாவொளிக் கற்றைக்கு உவமை கூறினார்.

( 204 )