(இ - ள்.) அங்கு ஒளி விசும்பிற்றோன்றி அந்திவான் அகட்டுக்கொண்ட - அவ்விடத்தே ஒளியுடைய விசும்பின் கண்ணே தோன்றிச் செக்கர் வானத்தின் இடையே இருத்தலைக் கொண்டுள்ள, அங்குழவித் திங்கள் - அழகிய இளைதாகிய பிறையினது, பாலவாய் தீம் கதிர்முறுவல நோக்கி - பால்போலும் நிலபுடைய வாயிற்றோன்றும் இனிய வொளியாகிய புன்முறுவலைக் கண்டு, ஆம்பல் தங்கு ஒளிவிரிந்த - ஆம்பல்மலர்கள் தம்மிடத்தே தங்கிய ஒளியை விரித்தன, தாமரை குவிந்த - தாமரை மலர்கள் கூம்பின, ஒருவராய் உலகுக்கெல்லாம் இனிய நீரார் எங்குளர் - ஒருவராக இவ்வுலகம் முழுதிற்கும் இனிமையே செய்யும் தன்மையுடையார் யாண்டுளர்? (இல்லை என்றபடி.) ஒரு சாரார்க்கு இனிமை செய்யின் மற்றொரு சாரார்க்கு இன்னலாய் முடிதலின், உலகின் அனைவருக்கும் இனிமையே செய்தல் யார்க்கும் இயல்வதன்று என்பதாம். |