(இ - ள்.) கணி - காலங்கணித்தறிதற்கு ஏதுவாகிய, நறமிடற்ற வேங்கை - தேனை மிடற்றின் உண்உடைய வேங்கை மலர்போன்ற, அவிர்சுணங்கின் மடவார் - பொன்னிறமான திதலைபூத்துத் திகழும் மகளிர்கள் தம்கை மேற்கொண்டு - தம்முடைய கையின்கண் ஏந்திக்கொண்டு, பணிமிடற்று மொழி பயிற்றும் - அணிகலன்களையுடைய தம் கண்டத்தால் சொற்களைப் பயிற்றுவிக்கப்பட்ட, பைங்கிளி - பச்சைக்கிளிகள், இன் செவ்வழியின் - இனிய செவ்வழி என்னும் பண்ணால், இசை மேற்பாட - இசைபாடுதலை மேற்கொள்ளவும், மணிமிடற்ற - நீலமணி போன்ற கழுத்தையுடையனவும், செங்கண்ண - சிவந்த கண்களை யுடையனவும், பவழக்கால் - பவழம்போன்ற கால்களையுடையனவும் ஆகிய, கபோதங்கள் - புறாவும், மதலைதோறும் - புரைமாடங்கள்தோறும், அணிமிடற்றினால் அகவ - அழகியமிடற்றொலியினாலே அகவவும், மாலை - மாலைக்காலம், அனங்கனையும் - காமவேளையும், அனல்விக்கும் - வெதுப்பும், அளியம் - ஆதலால் யாம் அளிக்கற்பாலேம், ( எ - று.) காமநோய் செய்யும் காமவேளையும் இம்மாலை காமநோயால் அனல்விக்கும் என்க. வேங்கை பூத்தலால் காலம் இன்னதென்று கணித்தல் மரபு. செவ்வழி - மாலைக் காலத்திற்குரிய பண். |