சுயம்பிரபை அருகன் திருக்கோயில் எய்துதல்

1035.

வெஞ்சுடர்வே 1லிளையவனாங் கிளையனவின்
     மெலிவெய்த விசும்பு செல்லும்
விஞ்சை 2யரை யன்மடமா மகணிலையா
     தெனவினவில் விளம்பக் கேண்மின்
3பஞ்சிலகு தேரல்குற் பாடகக்காற்
     பாவையர்கள் பலர்பா ராட்டச்
செஞ்சுடரோன் மறைபொழுதிற் சினவரன்றன்
     றிருக்கோயில் சென்று 4சார்ந்தாள்.

     (இ - ள்.) வெஞ்சுடர்வேல் இளையவன் - வெவ்விய சுடருடைய வேல் ஏந்திய
திவிட்டன், இனையவின் - இத்தகையவற்றால், மெலிவு எய்த - மெலியா நிற்ப, விசும்பு
செல்லும் விஞ்சை அரையன் - விசும்பின்கண் இயங்கும் விச்சாதர வேந்தனாகிய
சடிமன்னனுடைய, மட மாமகள் நிலையாது என வினவில் - மடப்பமுடைய சிறந்த மகளாகிய
சுயம்பிரபையின் நிலைமை யாதாயிற்று என்று எம்மை வினவுதிராயின், விளம்பக்கேண்மின் -
அவள் நிலையினையும் யாம் இனிக் கூறுவாம் கேளுங்கள், தேர் அல்குல் பாடகம் பஞ்சு
இலகு கால் பாவையர்கள் - தேர்த்தட்டை ஒத்த அல்குலையும், சிலம்பு அணிந்த அலத்தகம்
திகழும் அடியினையும் உடைய மகளிர்கள், பலர் பாராட்ட - பலர் பாராட்டெடுப்ப,
செஞ்சுடரோன் மறைபொழுதில் - செஞ்ஞாயிறுபட்ட மாலைப்பொழுதில், சினவரன்றன்
திருக்கோயில் - அருகக்கடவுளுடைய சிறந்த கோயிலை, சென்று சார்ந்தாள் - போய்
அடைந்தாள், (எ - று,)
இதுகாறும், நம்பிநிலைமை கூறினாம்; இனி நங்கைநிலை விளம்புவாம் கேண்மின்; நங்கை
இறை கோயிலைச் சென்று எய்தினாள்; எனத் தேவர் கூறினர் என்க.

( 209 )