1036

1036.

திண்ணியலைய மணிக்கதவந் தாழ்திறந்து
     திருவிளக்குத் திகழ மாட்டி
விண்ணியல நறும்புகையுங் காழகிலும்
     விசும்பிவர்ந்து விம்ம மூட்டிக்
கண்ணியுடன் வெறிமலரு நறும்பொடியுங்
     கமழ்சாந்துங் கையி னேந்திப்
பண்ணியல நரம்பிசைமேற் பரமனையே
     பணிமொழியாள் பரவா நின்றாள்.
     (இ - ள்.) திண்ணிலைய மணிக்கதவம் - உறுதியாக நிற்றலையுடைய மணிகள்
பதிக்கப்பட்ட கதவங்களின், தாழ் திறந்து - தாழக்கோலை அகற்றிக் கதவுகளைத்
திறப்பித்து, திருவிளக்குத் திகழமாட்டி - திருவிளக்குகளை ஒளிரும்படி ஏற்றி, விண்ணியல்
- விசும்பின்கண் பரவுதலையுடைய, அ நறும்புகையும் - அழகிய நறுமணங்கமழும்
புகையுடனே, காழ் அகிலும் - உள்வயிருமுடைய அகிற்கட்டையால் ஆய புகையும், விசும்பு
இவர்ந்து விம்ம - விண்ணிற்படர்ந்து செறியும்படி, மூட்டி - மூள்வித்து, கண்ணியுடன் -
முடிமாலையுடனே, வெறிமலரும் மணமிக்க மலரும், நறும்பொடியும் - நல்ல
மணப்பொடிகளும், கமழ்சாந்தும் - மணக்கும் சந்தனமும், கையின் ஏந்தி - ஆகிய
இவையிற்றைக் கையகத்தே யேந்தியவளாய், பண்ணியல நரம்பு இசைமேல் - பண்ணின்
இலக்கணம அமைந்த நரம்புகளையுடைய யாழினது இன்னிசையோடே, பணிமொழியாள் -
பணிதலையுடைய மொழிகளை மேற்கொண்ட சுயம்பிரபை, பரமனையே பரவா நின்றாள் -
அருகபரமனையே புகழ்ந்து பாடுவாளாயினாள், (எ - று,)

     பணிமொழியாள் கதவம் திறந்து, விளக்கம் மாட்டி, புகையும், அகிலும், விம்மமூட்டி,
கண்ணியும், மலரும், சாந்தும், ஏந்தி, நரம்பிசையோடே, பரனைப் பரவாநின்றாள் ; என்க.

(210)