1043.

இருங்கயத் 1தெழின்மலர் நிரந்து மேலதோர்
சுருங்கையங் 2கவிழ்ந்தெனத் தோன்று மீன்குழா
மரும்பிய பசலைவா னகட்டுத் தாரகை
யொருங்கியன் றொளிநகை யுமிழ நோக்கினாள்.

     (இ - ள்.) பசலைவான் அகட்டு அரும்பிய மீன்குழாம் - ஞாயிறாகிய கணவன் பிரிந்
தமையால் பசலைகொண்ட விசும்பின் கண் மலர்ந்த மீன் கூட்டம், இருங்கயத்து எழில்மலர்
நிரந்து எனத் தோன்றும் - பெரிய குளத்திலே மலர்ந்துள்ள மலர்கள் பரவியிருந்தாற்போலக்
காணப்பட்டது, தாரகை - அம்மீன்கள், ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ - ஒருங்கே கூடி
ஒளியாகிய சுடரை வீசா நிற்ப, மேலதுஓர் சுருங்கை அங்கு
அவிழ்ந்தென நோக்கினாள் - மேனிலை மாடத்தின் கண்ணதாகிய பலகணியைத் திறந்து
அம்மலர்களை நோக்கினாற் போன்று நங்கை தன் கண்ணைத் திறந்து அம்மீன்களை
நோக்கா நின்றாள், (எ - று.)

கயம் - வானத்திற்கும், மலர் விண்மீன்கட்கும், மேனிலை மாடத்தின் கண்ணுள்ள
சுருங்கை சுயம்பிரபையின் கண்களுக்கும் உவமைகள். ஓர் : அசை. சுருங்கை என்னும்
உவமத்திற்குப் பொருள் வருவித்துக் கூறுக. என என்னும் உவமைச்சொல்லை நிரந்து
என்பதனோடும் ஒட்டுக. தாரகை - சுட்டுப்பெயர் மாத்திரையாய்நின்றது. மேலது மேனிலை
மாடம். இது தலைக்குவமை. கண்கள் தலையிடத்தனவாதலால் மேனிலைமாடத்தின்
கண்ணுள்ள பலகணியை உவமை எடுத்தார்.

( 217 )