(இ - ள்.) திங்கள்அம் கொழுநனைச் சேர்ந்து - திங்களாகிய தம் அழகிய கணவனைக் கூடியே, தாரகை - உடுக்கள், அங்கு ஒளி முகிழ் நகை அரும்பும் - அவ்விடத்தே (தோன்றும் இன்பத்தால்) ஒளியுடைய முறுவல்பூக்கின்றன, ஆதலான் - அவ்வாறிருத்தலால், இளையவர்க்கு இளைமை மிக்க மகளிர்களுக்கு, மங்கலமணமகன் - நன்மை மிக்க காதலன், மணந்த போதலால் - உடனுறையும் காலத்தே உளதாவதன்றி, இளைமையின்பம் - காதலின்பம்; எங்குளது - அவர் உடனுறைவிலாதபோது எவ்விடத்தும் உளதாகாது. ஏ : அசை, (எ - று.) விசும்பிடத்தே மீன்களும், தம் கணவனைக் கூடியே முறுவல் பூத்துத் திகழ்கின்றன; காதலனைக் கூடிய விடத்தன்றி, மகளிர்க்கு இன்பம் வேறியாண்டுளது என்றாள், என்க. |