(இ - ள்.) ஒருத்த - வேறொரு தோழி, காதலார் - தம்முள் வேற்றுமையின்றிக் கலந்த காதலர் இருவர், காதன்மை கலந்து - அக்காதற்றன்மை மிக்குத் தம்முள் தலைப்பட்டு, காதலர்க்கு ஏதிலார் அயலராய் இயல்ப ஆய்விடில் - அக்காதலர் தம் கூட்டரவிற்கு இடையூறு செய்யும் ஆயமும் தாயரும் இன்னோரன்ன பிறரும் அவ்விடத்திலராய் ஒழியின் அங்ஙனம் அமையப் பெற்ற இடத்தை நோக்க, சாதலும் பிறத்தலும் இலாத தானமும் - சாவும் பிறப்பு மற்ற வீட்டுலகம் என்னும் அழிவிலாப் பேரின்பம் நல்கும் இடந்தானும், கோது எனக்கொண்மின் - சாறற்ற கோதுபோலத் தோன்றும் என்று எண்ணுங்கோள், என்று கூறினாள் - என்று எடுத்தியம்பினாள். (எ - று.) இவள் கூற்றில் அத்தகைய சிறந்த இடத்தைப் பெறப்போகும் சுயம்பிரபை அதை எண்ணி மகிழ்தற்கு இடமுண்டுபோலும். சாதலும் பிறத்தலும் இலாத தானம் - வீட்டுலகு. “தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகுÓ என்னும் திருக்குறளினும் இக் கருத்துண்மை காண்க. |