(இ - ள்.) திணை விராய் பொய்கையும் - மருதத்திணை வளமெலாம் விரவிய குளமும், திகிரிப் புள்ளினுக்கு - சக்கரவாகப்புட்களுக்கு, இணையிரா பிரிந்தபின் - தம் காதற்றுணை தம்முடன் இராதனவாய்ப் பிரிந்துபோய பின்னர், எரியொடு ஒக்கும் - நெருப்புப் போன்று சுடுவதாம், துணைவரால் தனியவர் திறத்துச் சொல்லின் - தம் காதற்றுணைவர் (பிரிந்தமையாலே) தனித்துறைவார் கூற்றில் வைத்துக் கூறுங்கால், புணைவர் ஆம்படியவர் இல்லை - அத்தனிமையோர் தம் துன்பவெள்ளத்தை நீந்தற்குப் புணையாந் தன்மையுடையார் பிறர் யாரும் இலர், பொன்அனீர் - திருமகளே போலும் தோழியர்காள் [என்று ஒருத்தி இயம்பினாள்,] (எ - று.) துணை பிரிந்த சக்கரவாகத்திற்குக் குளிர்ந்த பொய்கையும் தீயைப் போன்று சுடுவதாம்; துணைபிரிந்த மகளிரின் துயர் போக்க வேறு யாராலும் இயலாது என்றாள் என்க. |