(இ - ள்.) நல்வினை கழிதலும் - இன்புறுத்தும் நல்வினைப் பயன் நுகர்ந்தொழிந்தவுடனே, நலியும் தீவினை செல்வதே போல் - துன்புறுத்தும் தீய வினைப்பயன்கள் நுகர்ச்சிக்குச் சென்று தலைப்படுமாறு போலே, இருள்செறிந்து சூழ்ந்தது - பகற்பொழுது கழிந்தவுடனே இருள் நெருங்கிப் பரவிற்று, ஆயிடை - அப்பொழுது, படர்ந்த பல்வினை மடிந்தன - பரவிய பல்வேறு தொழில்களும் நிறுத்தப்பட்டன, வல்வினைக்கயவரே வழங்கும் கங்குலே - களவு முதலிய தீவினை செய்யும் கயமாக்கள் மட்டுமே வழங்குதற்குரிய அவ்விரவின்கண், (எ - று.) அவ் விரவின்கண் இருள் சூழ்ந்தது என்க. நல்வினையும் தீவினையும் மாறி மாறி வருதலின் அவற்றைப் பகலிரவுகட் குவமையாக்கினார். கொலை களவு முதலிய தீவினை செய்யும் மாக்களே இரவிடைத் திரிவராதலின் “வல்வினைக் கயவரே வழங்கும் கங்குல்“ என்றார் என்க. |