1059.

மடந்தையர் முலைமுக மடுத்த மார்பினர்
அடைந்துதே னுறங்கிய வலங்கன் மாலையார்
மிடைந்ததோ டழூஉப்பிணை நெகிழ மெல்லவே
இடங்கழித் தொழிலொழிந் திளையர் 1துஞ்சினார்.

     (இ - ள்.) இளையர் - இளமை மிக்க ஆடவர், மடந்தையர் முலைமுகம் -
இளமகளிராகிய தம் காதலிமார்களின் முலைக்குவடுகள், மடுத்த மார்பினர் - குத்தப்பட்ட
மார்பினையுடையராய், தேன் அடைந்து உறங்கிய அலங்கல் மாலையார் - வண்டுகள்
மொய்த்துறங்குதலையுடைய மலர்மாலையையுடையராய், மிடைந்த தோள் தழூஉ
பிணைமெல்ல நெகிழ - தம்முள் நெருங்கிய தோள்களைத் தழுவி இணைதலாகிய செயல்
மெல்ல நெகிழ்ந்தவராய், இடங்கழித்தொழில் ஒழிந்து - அக்கலவித் தொழிலை விட்டு,
துஞ்சினார் - உறங்குவாராயினர், (எ - று.)

தழூஉட் பிணை - தழுவிப் பிணைதல் ; இடக்கரடக்கல். இடையாமமாகலின் வண்டுகளும்
அலங்கற் பள்ளியிற் றுயின்றன என்க. இடங்கழித் தொழில் - கலவித் தொழில். காம
மிக்கவிடத்தே நிகழும் தொழில் என்பது கருத்து.

( 233 )