(இ - ள்.) கய தலைக் களிற்றினாய் - மெல்லிய தலையையுடைய யானையை உடையவனே! கங்குல் - இரவிலே; ஓர்கனாக் கண்டது உளது - நீ ஒரு கனாவினைக் கண்டுள்ளாய்; நயந்து அது தெரியின் - விருப்பத்துடன் அக்கனாவினை ஆராய்ந்து பார்த்தால்; ஓர்வேழம் - ஒரு யானை; விசும்பு அகத்து இழிந்து வந்து - விண்ணிடத்தினின்றும் இறங்கிவந்து; நம்பி நளிகடல் வண்ணன் தன்னை - ஆண்மக்களிற் சிறந்தவனும் பெரிய கடல்போன்ற கருநிறத்தை யுடையவனுமான திவிட்டனுக்கு; வெண்போது சேர்ந்த தயங்கு ஒளிமாலை - வெள்ளிய பூக்களால் அமைந்த விளங்குகின்ற ஒளியினை யுடைய மாலையை; சூட்டி - அணிந்து; தன் இடம் அடைந்தது - தனது இடத்திற்குச் சென்றது. (எ - று.) அன்றே - அசை. கய, நளி என்பன பெருமையை உணர்த்தும் உரிச்சொற்கள். “தடவுங் கயவும் நளியும் பெருமை“ என்பது தொல்காப்பியம். இச் செய்யுளால் அரசன் கண்ட கனா இன்னதென்று குறிகாரன் எடுத்துக் கூறினான். |