உலகின் றன்மை

1063.

1மன்னிய மணித்தடத் தாம்பல் வாய்குடைந்
தின்னியன் மாருத மியங்குங் கங்குல்வாய்க்
கன்னியுங் காளையு மொழியக் காரிரு
டுன்னிய வுலகெலாந் துயில்கொண் டிட்டதே.

     (இ - ள்.) மன்னிய மணித்தடத்து - நிலைபெற்ற அழகிய குளங்களினுள்ள, ஆம்பல்
வாய்குடைந்து - ஆம்பல் மலர்களினகத்தே துளைந்து, இன்னியல் மாருதம் - இனிய
இயல்புடைய தென்றல், இயங்கும் - தவழ்கின்ற, கார் இருள் துன்னிய கங்குல்வாய் - கரிய
இருள் செறிந்த அவ்விரவின்கண்ணே, உலகெலாம் - இப்பெரிய உலகம் அனைத்தும்,
கன்னியும் காளையும் ஒழிய - சுயம்பிரபையும் திவிட்டநம்பியும் ஒழிய, துயில் கொண்டது ஏ
- உறங்கிற்று, ஏ : அசை, (எ - று.)

தென்றலியங்கும் அவ்விரவின் இடையாமத்தே நங்கையும் நம்பியுமொழிந்த அனைத்துயிரும்
துயின்றன என்க.

“மன்னுயி ரெல்லாந் துயிற்றி அளித்திரா
உன்னல்ல தில்லை துணை“ (திருக். 1168)

என்னும் குறட் கருத்திதனுட் போந்தமை காண்க.

( 237 )