வைகறையின் வருகை

1064.

நள்ளிரு ளிடையது நடப்ப வைகறை
புள்ளிமி ழிசையொடு புகுந்து போம்வழித்
தெள்ளிய மதியவன் செய்த தீமைபோன்
மெள்ளவே கனையிருண் மெலிவு சென்றதே.
 

     (இ - ள்.) நள் இருள் இடையது நடப்ப - செறிந்த இருளையுடைய இடையாமம்
இவ்வாறு கழிந்ததாக, புள்ளிமிழ் இசையொடு - பறவைகள் உறக்கம் நீத்தெழுந்து பாடுகின்ற
இசையோடே, வைகறை புகுந்து போம்வழி - வைகறையாமம் தோன்றி நிகழ்கின்றபோது,
கனையிருள் - செறிவுடைய இருள், தெள்ளிய மதியவன் - தெளிந்த அறிவுடையொருவனால்,
செய்த தீமைபோல - செய்யப்பட்ட தீமையைப் போன்று, மெல்லவே மெலிவு சென்றது -
பைப்பய மெலிந்து போயிற்று, (எ - று.)

தெள்ளிய மதியவன் ஒரோவழி ஊழினாலே தீமை செய்தானாயின் அதற்குப் பெரிதும் நாணி
அத்தகைய தீமை மீண்டும் நிகழாது தற்காப்ப அத்தீமை குறைந்து வருதல்போலே இருள்
குறைந்தது என்க.

( 238 )