(இ - ள்.) குலாம்புள் கிலு கிலுப்பு அரவம் - தம்முள் குலாவுதலையுடைய பறவைகளின் கிலுகிலு என்னும் ஒசை, கிளர்த்தன - ஆரவாரித்தன, மகரயாழ் மருளி இன் இசை - மகரயாழினது மருட்கையூட்டும் இனிய இசை, வளர்த்தன - எழுப்பப்பட்டன, கருங்கடற்றரங்கம் - கரியகடலின் அலைகள், தளர்த்தன - குறைந்தன, குணதிசை வேலைவட்டம் தன்னமே விளர்த்தது - கீழ்த்திசைக் கண்ணதாகிய வளைகடல் சிறிது வெள்ளென விளர்த்தது, (எ - று.) தன்னம் - சிறிது. வைகறைப் போதில் காற்றியக்கம் குறைதலால் அலைகள் சிறிது அடங்குதல் இயல்பு. தளர்த்தன - தளர்ந்தன : வலித்தல் விகாரம். பறவைகள் துயில்நீத்து ஒலித்தன, பாணர்கள் யாழ் இசை எழீ இயினர், கடற்றரங்கம் தளர்ந்தன, குணதிசை விளர்த்தது என்க. |