(இ - ள்.) அரசு ஆணைசெய்து வீற்றிருப்ப - ஆற்றலுடைய அரசன் ஒருவன் செங்கோன்மையுடையவனாய் ஆணைச்சக்கரம் உருட்டி அரியணையில் வீற்றிருப்பானாக, ஆயிடை - அப்பொழுது, கோணை செய் குறும்பு - தீமையே செய்யும் இயல்புடைக் கொல் குறும்புகள், கூர் மடங்கும் ஆறுபோல் - தம்மிகைச்செயல் ஒழிவதை ஒப்ப, சேண் உயர் திகிரியான் - விசும்பின்கண் உயர்த்திய ஒற்றை உருளையையுடைய ஞாயிற்றுக் கடவுளின், கதிர் சென்று ஊன்றலும் - சுடர் பரந்து நிலவியவுடன், முன் பரந்த சோதி - முன்னர்ப் பரந்து திகழ்ந்த உடுக்களின் ஒளி, பாணியால் கரந்த - அவ்வைகறைக் காலப்பகுதியோடே மறைந்தொழிந்தன, (எ - று.) கோண் + ஐ = கோணை - கோணுதலையுடைய செயல் எனவே தீவினை என்றபடி. பாணி - காலம்.“உரைசெய் திகிரிதனை யுருட்டி ஒருகோலோச்சி உலகாண்ட அரைச னொதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல்“ என்று கம்பநாடர், இரவின் வருகையின் பொருட்டு இச்செய்யுட் கருத்தை மாற்றி யமைத்துக் கொண்டமை காண்க. |