1067.

விளித்தன புலரிவெண் சங்கம் வேரியாற்
களித்தன கயமலர்த் தொழுதி யம்மல
ரொளித்துமுன் னுறங்கிய வொலிவண் டார்த்தன
தெளித்தது செறிபொழிற் றேம்பெய் மாரியே.

     (இ - ள்.) புலரி வெண்சங்கம் விளித்தன - விடியற் காலத்திலே ஒலிக்கும் மரபினவாய
மங்கலச் சங்கங்கள் முழங்கின, வேரியால் கயம் மலர்த் தொழுதி - மணத்துடனே குளத்தின்
கண்ணவாய தாமரை மலர்க் கூட்டங்கள், களித்தன - மலர்ந்து விளங்கின, அம்மலர்
ஒளித்து முன் உறங்கிய ஒலி வண்டு - அத்தாமரை மலர்களின் அகத்தே முதல்நாள் மாலை
ஒளித்து உறங்கிய இசைவண்டுகள் உறக்கம் ஒழித்தெழுந்து, ஆர்த்தன - ஆரவாரித்தன,
செறிபொழில் தேம் பெய் மாரி தெளித்தது - செறிந்த பூஞ்சோலை தேனாகப்
பெய்தலையுடைய மழையைப் பொழிந்தது, (எ - று.)

கதிர் தோன்றுங்கால் கோட்டுப்பூக்கள் மலர்ந்தது தேன் துளித்த லுண்மையின் தேம்
பெய்மாரி தெளித்த தென்றார்.

( 241 )