கனாவின் பயனை நிமித்திகன் கூறுதல் | 107. | மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் 1கேண்மோ நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன்வந்து தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான். | (இ - ள்.) மல் மலர்ந்து அகன்றமார்ப - மற்போர்செய்தலால் விரிந்த மார்பை யுடையவனே; அதன்பயனும் கேண்மோ - அக்கனாவின் பயனையுங் கேட்பாயாக; மின்மலர்ந்து இலங்கு பைம்பூண் - மின்னலைப் போல ஒளி பரந்து விளங்குகிற பசிய அணிகலன்களை யணிந்த; விஞ்சை வேந்து ஒருவன் வந்து - வித்தியாதர அரசன் ஒருவன் இவ்வுலகத்திற்குவந்து; நல்மலர் நகைகொள்கண்ணி - நல்ல மலரால் விளங்குதலையுடைய மாலையை அணிந்த; நம்பி தன் நாமம் ஏத்தி - திவிட்டனது பெயரைப்புகழ்ந்து போற்றி; தன்மகள் ஒருத்தி தன்னை - தன்மகள் ஒருத்தியை; தந்தனன்போகும் என்றான் - மணஞ்செய்து கொடுத்துவிட்டுப் போவான் என்று கூறினான். (எ - று.) மற்று, தான் அசைநிலைகள். விஞ்சை வேந்தொருவன் என்றது இரத நூபுர நகரத்தரசனாகிய சுவலனசடி யரசனை, தன்மகள் ஒருத்தி என்றது அவன் மகளாகிய சுயம்பிரபையை. கேண்மோ : மோ. முன்னிலையசை. நகை - விளங்குதல்; தொழிற்பெயர். நகு - பகுதி. ஐ - விகுதி. | ( 38 ) | | |
|
|