(இ - ள்.) குருமாமணி வேய் குடை மும்மை உடைப் பெருமான் - நிறமமைந்த மணிகளாலே அழகு செய்யப்பட்ட குடைகள் மூன்றனையுடைய அருகக்கடவுளின், அடி பேணிய - திருவடிகளைப் போற்றுதற் பொருட்டு, பூசனைநாள் - விழா நாளை, கருமால் களியானைகள்மேல் - கரிய நிறமுடைய பெரிய மதமயக்கம் கொண்ட அரசுவாக்களின் எருத்தத்தே, அருமாமுரசு ஆர்ப்ப அறைந்தனரே - அரிய பெரிய முரசங்களை ஏற்றி ஆரவாரிப்பச் செய்து அறிவிப்பராயினர், (எ - று.) முக்குடை நிழற்றும், பெருமான் திருவிழா நாளை, யானையேறி முரசறைந்து, மாநகர்க் கீந்தார் என்க. |