1087.

மாளிகைநி ரைத்தமணி மாடநகர் முன்னா
லாளியர சேந்துமணி 3யாசனம தன்மேற்
காளைகழல் வேந்தர்பலர் சூழ்தரவி ருந்தா
னாளொடுபொ லிந்தநகை மாமதிய மொத்தான்.
 

     (இ - ள்.) காளை - திவிட்டநம்பி, மாளிகை நிரைத்த மணி மாடம் நகர்முன்னால் -
மாளிகைகள் மிக்கு நிரைந்துள்ளதும் மணிகள் இழைத்த மேனிலைமாடங்களை யுடையதும்
ஆகிய அரண்மனையின் முன்மண்டபத்தே, ஆளி யரசு ஏந்தும் மணி ஆசனமதன் மேல் -
அரசரிமாவால் சுமக்கப்பட்ட மணிகள் பதித்த அணையின்மேலே, கழல் வேந்தர் பலர்
சூழ்தர - வீரக்கழலணிந்த அரசர்பலர் தன்னைச் சூழும்படி, இருந்தான் - இருந்தவன்,
நாளொடு பொலிந்த நகை மா மதியம் ஒத்தான் - விண்மீன்கள் தன்னைச் சூழாநிற்ப
அவற்றிடையே அழகுற்றுத் திகழ்கின்ற முழுவெண்டிங்களை ஒத்திருந்தான், (எ - று.)

திவிட்டநம்பி மண்டபத்தே வேந்தர் பலர் சூழ அரியணை மேலிருந்தவன், வானத்தே
உடுத்திரளோடே பொலிவுற்ற திங்கள் மண்டிலத்தை ஒத்தான் என்க..

( 261 )