(இ - ள்.) என்று அவன் இயம்பக் கேட்டு - மேற்கூறியவாறு அந்த நிமித்திகன் சொல்லக் கேட்டு; இருந்தவர் வியந்து நோக்கி - அவையிலுள்ளோர் வியப்படைந்து அரசனைப் பார்த்து; ஒன்றிய உலகம் எல்லாம் - பொருந்திய வுலகங்கள் எல்லாவற்றையும்; ஒரு குடை நீழல் காக்கும் - ஒற்றைவெண் கொற்றக்குடையின் நிழலிலே பாதுகாக்கின்ற; பொன்திகழ் அலங்கல் மார்ப - பொன்னாலாகி விளங்குகின்ற மாலைகளை யணிந்த மார்பையுடையவனே!; சென்று உயர்திலகம் கண்ணி திவிட்டன் - மேலே சென்று சிறந்த திலகம்போல் உயர்ந்த மாலையை அணிந்த திவிட்டன்; இத்திறத்தனே ஆம் - இவ்வாறு சிறப்புப் பெறுதற்கு உரியவனேயாவன்; இது பொய் அன்று - நிமித்திகன் கூறியது மெய்யே; போற்றி என்றார் - நிமித்திகன் மொழிகளை மதிப்பாயாக என்றார்கள். (எ-று.) இருந்தவர் - வேள்வியாசிரியர் அமைச்சர் முதலியோர். இவர்கள் குறிகாரன் உரையை மதித்துப்பேசியது திவிட்டனுடைய நடையுடை பாவனை முதலியவைகளை நன்கு உணர்த்திருந்தமையினாலே என்க. திறத்தனே - ஏ - தேற்றப்பொருளது. போற்றுதல் - குறிக்கொள்ளுதல். |