வேள்வியாசான் அமைதி

1095.

சாந்துமெழு கிட்டதட மாமணிநி லத்தைச்
சேர்ந்துதிகழ் பொன்னியல்ச லாகைநுதி தீட்டிப்
போந்துமொரு 3கால்விரைபெ ருக்கிமெழு கிட்டா
ளாய்ந்தமறை யோதியத னாரிடம றிந்தான்.
 

     (இ - ள்.) ஆய்ந்த மறை ஓதி அதன் ஆரிடம் அறிந்தான் - சான்றோரான்
ஆராயப்படட நான்கு மறைகளையும் நன்கு ஓதி அம்மறையகத்தவாகிய இருடி
வாசகங்களையும் நன்கு அறிந்தவனாகிய வேள்வியாசான், சாந்து மெழுகிட்ட தடமாமணி
நிலத்தைச் சேர்ந்து - முன்னரே நறுமணச் சாந்தால் நன்கு மெழுகப்பட்டு விரிந்துள்ள
சிறந்த மணிகள் பதித்த தரையை எய்தி, பொன்னியல் சலாகை நுதி தீட்டி -
பொன்னாலியன்றதொரு கோலினது கூர்நுனியால் கோடுகள் வரைந்து காட்டி, பேர்ந்தும்
ஒருகால் விரைபெருக்கி மெழுகிட்டான் - மீண்டும் ஒருமுறை மணப்பொருள் கூட்டிய
சாந்தாலே அவ்வரைந்து காட்டிய இடத்தை மெழுகும்படி செய்தான், (எ - று.)

ஆரிடம் - இருடி வாசகம்; வைதிகமுறை. முன்னர்ச் சாந்தான் மெழுகிட்ட நிலத்தை,
மறையோதி ஆரிடமறிந்த அந்தணன், சலாகையாலே கீறி மீண்டும் விரைபெருக்கி
மெழுகுவித்தான் என்க. சலாகையால் கீறியது, மணவேள்வி நிகழ்தற்குரிய இடத்தை வரைந்து
கொள்ளற் கென்க.

( 269 )