(இ - ள்.) அங்கு முன் வளர்த்த அழலே கடவுளாக - அத்திருமண வேள்வி மன்றத்தே முன்னர் ஆசானால் வளர்க்கப்பட்ட தீயே இறைவனாக, மங்கையை மணக்குழவின் முன்னை - சுயம்பிரபையைத் திருமணங் காண்பாராகிய அக்கூட்டத்தின் முன்னிலையிலே, வரைவேந்தன் - சடியரசன், கொங்குவிரி தார் அவற்கு - மணங்கமழும் மாலையணிந்த திவிட்டநம்பிக்கு, நீரொடு கொடுத்தான் - நீர்வாக்கி ஈந்தான்; இவ்வாற்றால், நங்கையொடு -சுயம்பிரபையுடனே, நான்மலர் உளாளையும் - புதிய தாமரை மலரிடத்தே வதியும் திருமகளையும் திவிட்டன் ஒருவேர மணந்தவன் ஆயினான், (எ-று.) சுயம்பிரபை - திருமகளும் ஆதலால் இங்ஙனம் கூறினர். இல்லவன் மாண்புடையளாய போது அவனுக்கு எத்திருவும் உடனெய்துமாகலின் மாண்புடைய சுயம்பிரபையை எய்தியபொழுதே திருமகளும் வலிந்து வந்து புணர்ந்தனள் எனினும் ஆம். |