வண்டுகளுங் கொங்கைகளும்

11. காவியுங் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் 2டடர்த்ததே னகத்து மங்கையர்
3நாவியுங் குழம்புமுண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
     (பாடம்) 1. நுங்கள் போல்வார். அர்த்ததேன், அமர்ந்ததேன், 3. சிலபிரதிகளில்
இரண்டவதடி, “காவியுங் குழம்புமுண்டெழுந்த கொங்கைமேல்“ என்று காணப்படுகிறது.
 

     (இ - ள்.) காவியும் குவளையும் நெகிழ்ந்து - நீலமலரும், குவளை மலரும்
வாய்விரிந்து; கள்உமிழ் ஆவிஉண்டு - தேனைச்சொரிய எழும் தேன் துளிகளாகிய
ஆவியை உண்டு; தேன் அடர்த்த - வண்டுக் கூட்டங்கள் நெருங்கின; அகத்து மங்கையர்
- இல்லத்திலுள்ள மாதர்களின்; நாவியும் குழம்பும் உண் நகிலம் - கத்தூரியும்
குங்குமக்குழம்பும் அணியப்பெற்ற கொங்கைகள்; நல்தவம் மேவிநின்றவரையும் -
நல்லதவத்தைச் செய்துநிற்கும் துறவிகளும்; மெலியவிம்மும் - நலியும்படி பருத்திருக்கும்,
(எ - று.)

     கருங்குவளை செங்குவளை முதலியவைகளிலுள்ள தேனைப்பருகி யாண்டும்
வண்டுக்கூட்டங்கள் மொய்க்கின்றன. இல்லத்துள்ள மாதர்களின் கொங்கைகளோ
அளவுகடந்து பருத்து விம்மிநிற்குந் தோற்றத்தினால் அவர்தம் கணவன்மாரையே யன்றி
நற்றவம் புரிந்துநிற்கும் துறவிகளைக்கூட வருத்தத்தக்கவைகளாக விளங்கி நிற்கின்றன. காவி
குவளை என்பன ஒரு பொருள்தரும் மொழிகளாயினும் குவளை முதலிய நீர்ப்பூக்களின்
வேறுபாடுகளை உணர்த்திநிற்கின்றன. ஆவி : பல பொருள்தரும் ஒருசொல், ஈண்டு நீராவி
வடிவாகிய தேன்துளியை உணர்த்திநின்றது. மேவி நின்றவரையும் என்னுமிடத்திலுள்ள
உம்மை உயர்வு சிறப்பு. மேவிநின்றவரையும் என்புழி ஐகாரம் சாரியை என்க.

( 11 )