நம்பியும் நங்கையும் மணத்தவிசில் வீற்றிருத்தல்

1100.

மன்னியழல் வேள்வியி லவற்குவல மாகப்
பின்னிய 1தருப்பைகள் பிடித்தவை விடுத்தாங்
கன்னமனை யாளொடயில் வேலவனி ருந்தான்
கன்னியொடி யைந்தகதிர் மாமதிய மொத்தான்.

     (இ - ள்,) அழல் வேள்வியில் மன்னி அவற்கு வலமாக - தீயையுடைய
மணவேள்விக்கண் நிலைபெற்றுத் திவிட்டநம்பிக்கு வலப்பாகத்தே, பின்னிய தருப்பைகள்
பிடித்து அவை விடுத்து - பிணைக்கப்பட்ட தருப்பை பிடித்துச் செய்வதாய தொழில்களைச்
செய்து பின்னர் அத்தொழிலையும் விட்டு, ஆங்கு அன்னம் அனையாளொடு -
அவ்விடத்தே அன்னம்போன்ற சுயம்பிரபையுடனே, அயல் வேலவன் இருந்தான் -
அயிலாகிய வேற்படையையுடைய திவிட்டநம்பி வீற்றிருக் கின்றவன், கன்னியொடு இயைந்த
கதிர் மாமதியம் ஒத்தான் - சித்திரை நாளொடு வீற்றிருந்த ஒளியுடைய முழுத்திங்களை
ஒத்திருந்தான், (எ - று.)

வலமாகப் பின்னிய தருப்பை எனினுமாம். கன்னியோடியைந்த கதிர்மதி என்றது சித்திரைப்
பருவத்திங்களை. அழல் வேள்விச் செயல் முற்றி நங்கை யோடிருந்த நம்பி, சித்திரை
நாளொடு இருந்த திங்களை ஒத்தான், என்க. அத்திங்கள் மிகுந்த ஒளியுடைத்தாயிருக்கும்
என்ப. இதனை “காப்யபிக்யா தயோராஸீத் வ்ரஜதோ: சுத்த வேஷயோ: ஹிம நிர்முக்தயோர்
யோகே சித்ராசந்த்ரம ஸோரிவÓ எனவரும் ரகுவம்சத்தாலும் உணர்க. (1-46)

( 274 )