(இ - ள்.) பொங்கு அழல் செய் வேள்விமுறை போற்றலும் - மிக்கெழுதலையுடைய தீயாற் செய்யும் வேள்விச் சடங்கனைத்தும் செய்துமுடித்தவுடன், எழுந்தான் - மணத்தவிசினின்றும் எழுந்து, அணங்கின் அணிமெல்விரல் - சுயம்பிரபையின் மோதிரம் அணிந்த மெல்லிய விரலை, அங்கையின் - தனது அழகிய கையாலே, பிடித்து - பற்றிக்கொண்டு, மங்கையொடு - அச் சுயம்பிரபையோடே, காளை - அத்திவிட்டநம்பி, வலனாக வருகின்றான் - வலஞ்சுற்றி வருகின்றவன், கங்கையொடு இயைந்து - கங்கையாற்றோடு பொருந்தி, வரு கார்க்கடலோடு ஒத்தான் - புடைபெயர்ந்து வருகின்ற கரியகடலை ஒத்து விளங்கினான், (எ - று.) அங்கையின் அணங்கின் என்புழி, மாதங்கி என்னும் தெய்வம் உறையும் எனினுமாம். நங்கையின் மெல்விரலைத் தன் அங்கையாற்பற்றித் தீவலஞ் செய்வான், கங்கையொடு புடைபெயரும் கார்க்கடலொத்தான், என்க. |