வேறு
அரசன் பேசுதல்
111. கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
1தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்.
 
     (இ - ள்.) கொங்கு அலர் தெரியலான் - மணம்விரிகின்ற மாலையை உடையவனான அரசன்; அவன் - அந்நிமித்திகன்; கங்குல்வாய் கனவு - தான் இரவிற்கண் கனவை; கருதிச் சொற்றதும் - ஆராய்ந்து கூறியதையும்; மங்கலம் பெரும்பயன் வகுத்தவண்ணமும் - அதற்குரிய ஆக்கமான பெரும்பயன் உரைத்த தன்மையையும்; கூறி - அமைச்சர்கள் முன் எடுத்துக் கூறி; கொய்ம்மலர்த்தொங்கல் ஆர்நெடுமுடி - பறிக்கப்பட்ட மலர்மாலை பொருந்திய நீண்ட முடியானது; சுடரத்தூக்கினான் - விளங்குமாறு தன்னுடைய தலையை உயர்த்தி மற்றவர்களைப் பார்த்தான். (எ - று.)

     திருவோலக்க மண்டபத்தில் நிகழ்ந்தவைகளை அமைச்சர்களும் உடனிருந்து
கேட்டவர்களாக இருந்தும், இங்கு மன்னவன் திரும்பவும் அவர்களிடம் எடுத்துக்கூறியது
அச்செய்தியில் அமைச்சர்கள் நன்றாகக் கருத்துச் செலுத்துதற்பொருட்டு என்க. கங்குல்வாய்
- வாய் ஏழனுருபு: தெரியல் - மாலை. தொங்கல் - மாலை. அரசன் தலையைத்
தூக்குதற்குக் காரணம் செய்தியை யாவர் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்பதை அவர்களுடைய முகப் பொலிவைப் பார்த்து உணர்ந்துகொள்ளுதற்காம்.

( 42 )