(இ - ள்.) பொன்னியல் கொடியின் ஒல்கி - பொன்னாலியன்ற பூங்கொடியைப் போன்று துவண்டு, பூவணை பொருந்தும் பாவை - மலரணையிலே பொருந்திய சுயம்பிரபையின், கன்னி நாண் ஏற்றம் இதுகாறும் அழிதலைப்பெறாத நாண் என்னும் அப் பெண்மையின் மிகுதிப்பாட்டை, காளை - திவிட்டன், கண்களி கொள்ள நோக்கி - தன் கண்கள் பேரின்பமெய்துமாறு கூர்ந்து நோக்கியிருந்து, பின் அவள் ஒடுங்க வாங்கி - பின்னர் அவள் மேலும் நாணத்தாலே ஒடுங்கிப் போம்படி தன் கைகளாலே எடுத்து, பெருவரை அகலம் சேர்த்தி - பெரிய மலைபோன்ற தனது மார்பகத்தே அணைத்து, இன்னகை மழலை கேட்பான் - அவளுடைய இனிய முறுவலோடு கூடிய மழலைச் சொற்களைக் கேட்டற்கு விழைந்து, என்கொல் இம்மிகை நாண் என்றான் - என் அன்பே! இத்தகைய மிகையாய நாணத்தை நீ எய்துதற்கு ஏது என்னை? என்று வினவினான், (எ - று.) நாணினானிகழ்ந்த மெய்ப்பாடுகளை ஒற்றுமை கருதி நாண் என்றார். நம்பி, பாவை நாண் ஏற்றம் நோக்கி, பின் அவள் ஒடுங்கவாங்கி, சேர்த்தி, மழலை கேட்பான், இம்மிகை நாண் ஏன்? என்றான் என்க. |