(இ - ள்.) திருமேனி - இவள் திருமேனியோவெனில், செங்குவளை நாறும் - செங்கழுநீர் மலரின் நறுமணம் கமழ்வதொன்றாயிருக்கும், செவ்வாயும் ஈர் இதழும் - செவ்விய வாயும் இரண்டாகிய அதரங்களுமோவெனில், அக்குவளை ஆம்பலும் நாறும் - அழகிய நீலோற்பல மலரின் நறுமணத்தையும் ஆம்பல் மலரின் நறுமணத்தையும் தம்பாற் கமழப்பெறுவனவா யிருக்கும், இங்கு இவளை - இவ்விடத்தாளாகிய இச்சுயம்பிரபை நல்லாளை, முன் படைத்த தேவன் - முன்னர் இத்தகையளாய்ப் படைத்த இறைவனோவெனில், என் இன்னுயிரை - என் ஆருயிரை, பைங்குவளை மாலையாட்கு - பசிய குவளைமலர் மாலையை அணிந்துள்ள இவட்கு, ஆளாய்ப் படைத்தானே - கணவனாம் மாத்திரையே படைத்தொழிந்தான். ஏ - இரண்டும் ஆலும் அசைகள், (எ - று.) இவள் மேனி குவளை நாறும், செவ்வாயும் இதழும் ஆம்பனாறும், இங்ஙனம் இவளைப் படைத்தான், என்னை இவட்குக் கணவனாந்துணையே படைத்தான் என்றான் என்க. என்றது என் மேனி முதலியன இவட்கேற்ப இயற்கை மணமுடையனவல்ல என்றவாறு. |