(இ - ள்.) இணைநெடுங்கண் பூம்பாவை - இணைந்த நெடிய கண்களையுடைய தாமரைமலரின் மேலுறையும் திருமகள், அளிய என் - இரங்கத்தக்க என்னுடைய நெஞ்சத்தே, அன்பு உருகு காமத்தீ முன்மாட்டி - அன்பு உருகுதற்குக் காரணமான காம நெருப்பை முற்பட மூட்டி, என்புருக வேவ - யான் என் என்புகள் உருகும்படி வேகாநிற்கும்பொழுது, பெருகு முந்நீர் அமுதாய் விளைத்து - பெருகாநின்ற பாற்கடல் அமுதம்போன்று இன்பத்தை யுண்டாக்கும் பொருட்டு, இனிய மின் பருகும் நுண் இடையார் - காண்டற்கினிய மின்னலையும் தனது ஒளியால் விழுங்குமியல்புடைய நுண்ணிய இடையை உடைய இச்சுயம்பிரபையாரின், மெல்லுருவம் கொண்டது - மெல்லிய உருவத்தை மேற்கொண்டதொரு செயல்போலும்,(எ - று.) வேவ - வேகச்செய்தென்க. விளைத்து என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. முன் என்பதனை முன்மாட்டி என ஒட்டுக, பூம்பாவை - திருமகள். திருமகள் எனக்கு இன்பம் விளைக்க இவர் உருக்கொண்டபடி யாம் என்றான் என்க. |