(இ - ள்.) காவி ஆகின்ற - குவளைமலர் போன்ற, கரு மா மழைக் கண்ணி - கரிய பெரிய மழைபோன்ற கண்ணையுடைய இச் சுயம்பிரபையோ வெனில், மேவி யான் உண்ணும் - பொருந்தி யான் நுகர்கின்ற, அமிர்தாய் - அமிழ்தமாய், விருந்து ஆகி - மேலும் மேலும் புதுமையுடைய பொருளாய், ஆவியாய் - என் ஆருயிரேயும் ஆய், அருமருந்தும் ஆகின்றாள் - பெறற்கரிய மருந்தும் ஆவாளாகவும், பாவியேன் - பாவமுடைய யானோ,பாவைக்கு - பாவைபோன்ற இவள் திறத்து, ஓர் ஆளே ஆகின்றேன் - ஒரு கணவன் என்னும் மாத்திரையே ஆகின்றேன், ( ) நங்கை எனக்கு அமிர்தம் முதலிய எல்லாம் ஆக யானோ ஒரு கணவனே ஆகின்றேன் என்றான் என்க. இஃது ஊடலுணர்த்தக் கூறியது என்க. அவளை இன்றியமைந்து வாழமாட்டாத யானும், அவட்கு அமிர்த முதலியன போல்வே னாயின் அவள் என்னோடு பேசுவாள் அன்றோ என்றவாறு. |