(இ - ள்) செம்பவழம் ஏய்ப்பத் திகழ்ந்து இலங்கு சீறடியின் - சிவந்த பவழம் போன்று திகழ்ந்து விளங்கும் இவள் சிற்றடிகளின், வம்பு அழகு நோக்கி - பார்க்குந்தொறும் புதுமை நல்கும் அழகினை மட்டுமே இடையறாது நோக்கி, வழிபடுவதே சாலும் - அவையிற்றை வழிபடுதல் ஒன்றே எமக்குப் போதியதாகும், மேலும், அம்பவழவாயும் - அழகிய பவழத்தை ஒத்த திருவாய் மலரின் அழகையும், அளகம் சேர் வாள் நுதலும் - கூந்தல் புரளும் ஒளிமிக்க நெற்றியின் அழகையும், நுங்க - முழு முற்றும் நுகர்தற்கோ எனில், எம்பவமோ எம்மை அறியேம் - எம்முடைய இம்மானிடப் பிறப்போ அதற்கேற்ற தவமுடைத்து உடையதாகாமையின் யாம் எம்மை மதிக்கின்றேமில்லை, (எ - று.) அவன் பேசாமையின், மேலும் கூறுவான் அடியின் அழகே நோக்கி நோக்கி இன்புற எமக்குப் போதியதாம், அவளோடு அளவளாவுதற்கு யாம் தவம் உடையேம் அல்லேம் என்றான் என்க. இத்தகைய மொழியையே “பன்மாயக் கள்வன் பணிமொழிÓ என்று குறளுட் கூறியதென்க. |