அமைச்சர்கள் பேசுதல்

112. சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
1நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா 2யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே.
 
     (இ - ள்.) பாழிஅம் தோளினாய் - பருத்த அழகிய தோள்களை யுடையவனே!
திவிட்டன்; நீர்சூழும் உலகுஎலாம் - கடலாற் சூழப்பட்ட எல்லாவுலகங்களும்; தொழுது -
வணங்கி; தன் அடிநீழலே - தனது அடிகளின் நிழலிலே; நிரந்து கண்படுக்கும் நீர்மையான்
- ஒழுங்குபட்டுத் துயில்கொள்ளும்படியான தன்மையை உடையவனாகிய; ஆழி அம்கிழவன்
ஆய் - உருளைப் படைக்குரிய திருமாலாக; அலரும் என்பது - விளங்குவான் என்னுஞ்
செய்தியை; பண்டும் கேட்டும் - முன்பும் நாம் கேள்விப்பட்டுள்ளோம். (எ - று.)

     பாழி - வலிமையுமாம். ஆழியங்கிழவன் - திருமால்; பேரரசன். பயாபதி மன்னன்
உரைக்கு, அமைச்சர்கள், திவிட்டன் சிறந்த நிலையை அடைவான் என்பதை இன்று
கேட்டதுமட்டும் அன்று; முன்பும் கேள்விப்பட்டுள்ளோம் அல்லேமோ என்கின்றனர்.
பண்டும் என்பதிலுள்ள உம்மை இப்பொழுது கேட்டலேயன்றி என்பதுபட நின்றது.
புராணங்களிலே கூறப்பட்டிருத்தலால் பண்டுங்கேட்டும் என்றார். விசய திவிட்டர்களின்
செயல்களை அவர் தோன்றுமுன்னரே முனிவர்கள் புராணங்களிலே எழுதியுள்ளனர்.
அப்புராணங் கேட்டமையால் பண்டுங் கேட்டும் என்றார் என்பது கருத்து. இதனை
அரசியற் சருக்கத்தில் உணரலாம். கேட்டும் - தன்மைப் பன்மை முற்று.
 

( 43 )