1128.

வணங்கி வையந் தொழ2நின்ற
     மன்னன் காதன் மடமகள்போன்
மணங்க ணாறும் பூம்பாவை
     வளரல்வாழி நறுங்குரவே
மணங்க ணாறும் பூம்பாவை
     வளர்த்தி யாயி லிளையா ராற்
கணங்க ளோடு பறிப்புண்டி
     கண்டாய் வாழி நறுங்குரவே.

     (இ - ள்.) நறுங்குரவே - நறிய குராமரமே !, வையம் வணங்கித் தொழநின்ற மன்னன்
காதல் மடமகள் போல் - உலகெலாம் வணங்கித் தொழும்படி சிறப்புற்று நின்ற
சடிமன்னனுடைய அன்புக்குரிய மடமிக்க மகளாகிய சுயம்பிரபையை ஒப்பாகக்கொண்டு,
மணங்கள் நாறும் பூம்பாவை வளரல் - மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனாதேகொள், மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனுவையாயின், நறுங்குரவே - நறியகுராமரமே நீ, இளையாரால் கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் - இளமகளிர்களாலே கூட்டத்தோடே வந்து பறிக்கப்படுவாய் காண்; கண்டாய், வாழி: முன்னிலை யசைகள்,
(எ - று.)

குரவம்பூவை, பாவை என்பது மரபு, இளமகளிர்கள் குராமலரைப் பறித்து மகவெனவைத்து
ஆட்டயர்தல் மரபு.

( 302 )