(இ - ள்.) இன்னணம் இளையவர் பாடக் கேட்டலும் - இவ்வாறு அவ்விள மகளிர்கள் இசைபாடுதலைக் கேட்டவுடனே மன்னவன் மடமகள் முகத்து வாள் நிலா மின்னி - சடிமன்னனின் இளமகளாகிய சுயம்பிரரையின் முகத்தே ஒளி நிலாத் தவழ்ந்து, ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது - ஓர் அழகிய முறுவல் பூத்து மறைந்ததனை, கல்நவில்தோளவன் கண் கொண்டிட்டவே - கல்லைஒத்த தோளையுடைய திவிட்டநம்பியின் கண்கள் கண்டன, ஏ: அசை, (எ - று.) இவ்வாறு மகளிர் பாடக் கேட்டவுடன், நங்கை முகத்து ஓர் அணி நகை முகிழ்த்து மீள, அதன் நம்பி கண்டனன், என்க. |