திவிட்டன் சிறந்தவனே என்றல்

113.

1நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்.
 

     (இ - ள்.) நம்பி - திவிட்டன்; நல்தவம் உடையனே - நல்ல தவத்தை யுடையவனே
யாவன்; என்று - என்று கூறி; பூண் வில் தவழ் - அணிகலன்களின் ஒளிதவழ்தலோடு;
சுடர் ஒளி விளங்கும்மேனி - இயற்கையொளி விளங்குகிற உடலையுடைய; அக்கொற்றவன்
குறிப்பினை - அப் பயாபதி மன்னன் குறிப்பினை; அறிந்துகூறிய - நூன்முறைப்படி அறிந்து
கூறுதற்கு; மந்திரத்து உளார் அவர் தொடங்கினார் - ஆராய்ச்சி மன்றத்திலிருந்த
அமைச்சர்கள் தொடங்கினார்கள். (எ - று.)

     அமைச்சர் திவிட்டனுடைய குணங்குறிகளைப்பற்றிப் பயாபதி மன்னனிடம் சொல்லத்
தொடங்கினார்கள். தவம் - செல்வத்திற்குக் காரணமானது. “இலர்பல ராகிய காரணம்
நோற்பார் சிலர்பலர் நோலாதவர்“ என்னுந் திருக்குறளுங் காண்க. நோற்றல் - தவஞ்
செய்தல். கூறிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மந்திரத்துளார் கொற்றவன்
குறிப்பறிந்து திவிட்டன் நீர்மையான், அலரும் என்பது பண்டுங் கேட்டும், உடையன் என்று
மேலுங் கூறத் தொடங்கினார் என்க.
 

( 44 )