சடி மன்னன்பால் ஓர் ஒற்றன் வந் துற்ற துரைத்தல்

1132. கண்மிசை கனிந்த காதற்1
     கனிபடு செல்வ முந்நீர்
உண்மிசை யுக்கோர் நச்சுத்
     துள்ளிவந் துறைப்ப தேபோல்
விண்மிசை யிழிந்து வந்த
     வொற்றனோர் வெஞ்சொன் மாற்ற
மண்மிசை யிருந்த விஞ்சை
     மன்னனை வணங்கிச் சொன்னான்.
 
     (இ - ள்.) கண்மிசை கனிந்த காதல் கனிபடு செல்வம் - கட்பொறியின் கண் மிக்குத்
தோன்றும் இயல்பிற்றாய காதலால் விளைகின்ற காமத்துக்காழில் கனியைத் தோற்றுகிக்கின்ற
செல்வந்தரும், மண்மிசை இருந்த - போதன நகரத்தே இனிது நுகர்ந்திருந்த,
விஞ்சைமன்னனை - சடியரசனை, விண்மிசை யிழிந்து வந்த ஒற்றன் - விசும்புவழி யியங்கி
இறங்கி வந்தவனாகிய விச்சாதர ஒற்றன், வணங்கி - தொழுது, முந்நீர் உண்மிசை -
கடலாற்றரப்பட்ட அமிழ்த உணவின்மேல், ஓர் நச்சுத்துள்ளி உக்கு வந்து உறைப்பதேபோல்
- ஒரு நஞ்சின் துளி சிதறி வந்து தெறித்ததைப் போன்று, ஓர்வெஞ்சொல் மாற்றம்
சொன்னான் - ஒரு கொடிய சொல்லாகிய செய்தியைக் கூறினான், (எ - று.)

     ஊண் - உண் எனக் குறுகி நின்றது. முந்நீர் ஊண் எனவே அமிழ்த மாயிற்று. ஊண்
- சடியின் இன்ப நுகர்ச்சி என்க. போதனத்தே சடி, இவ்வாறு செல்வ நுகர்ச்சியில்
அமைந்திருப்ப, ஒரு விச்சாதர ஒற்றன், அமிழ்த உண்டியில் நஞ்சு துளித்தாற் போன்று,
ஒரு வெஞ்சொல் மாற்றம் வணங்கிச் சொன்னான் என்க. அம் மாற்றமாவது அச்சுவகண்டன்
நின்மேற் படைகொண்டு பொர வருகின்றான் என்ற மாற்றம். இம்மாற்றம் சடியின்
மனவமைதியைக் குலைத்தலின், நஞ்சுத் துளியை நிகர்த்ததென்க.

( 2 )