(இ - ள்.) விரைசெலல் இவுளித்தேரோய் - விரைந்த செலவினையுடைய புரவிபூண்ட தேரையுடைய வேந்தனே, விஞ்சையர் உலகம் ஆளும் அரைசர்கள் - விச்சாதரர் உலகத்தை ஆளாநின்ற அரசர்கள் பலரும், திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் - ஆழியேந்திய வேந்தனாகிய அச்சுவ கண்டனுடனே, கடல்கள் ஏழும் - ஏழு கடலும் ஒருங்கே திரண்டு, திரைசெல வுரறி - அலைகள் விரைந்து செல்லுமாறு முழங்கி, ஞாலம் தின்னிய - உலகத்தை விழுங்கும் பொருட்டு, கரைசெல வருவபோல் - கரையின்மேல் படர வருவதைப் போன்று, நம்மேல்வரக் கருதுகின்றார் - நம்மீது போர் செய்ய வருதலை எண்ணுகின்றனர், (எ - று.) அரசே! விச்சாதர வேந்தர் பலர், அச்சுவகண்டனோடு, ஊழிக் காலத்துக் கடல்போன்ற படையோடே, நம்மேற் போர் ஆற்றலுக்கு வரக் கருதியுள்ளார் என்றான், என்க. |