திவிட்டன் அரிமாவைக் கொன்றமைபற்றி
விஞ்சையருலகிற் பட்டமை வினாதல்

1137. சொரிகதிர் வயிரப் பைம்பூ ணரசர்கள் பலருஞ் சூழ
எரிகதி ராழி யாள்வா னினிதினிங் கிருந்த போழ்தின்
அரியது கேட்க வென்ன வரிகேது வென்பா னாங்குப்
பெரியதோர் வியப்புச் சென்று பட்டது பேசி னானால்.
     (இ - ள்.) சொரி கதிர் வயிரப் பைம்பூண் அரசர்கள் பலரும் சூழ - வீசுகின்ற
சுடரையுடைய வயிரத்தாலாய பசிய அணிகலன் அணிந்த பல மன்னர்களும் சூழ, எரிகதிர்
ஆழியாள்வான் - சுடர்வீசும் ஆழிப்படையை ஆளுகின்ற அச்சுவகண்டன், இங்கு இனிதின்
இருந்தபோழ்தில் - இவ்விடத்தே இனிதாகக் கொலுவீற்றிருந்ததோர் அமையத்தே, அரியது
கேட்க என்ன - அரசர் பெருமான் கேட்டற்கரிய செய்தி ஒன்றை இப்போது யான் கூறக்
கேட்டருள்க என்று கூறத் தொடங்கி, அரிகேது என்பான் - அரிகேது என்பவன், பட்டது
பேசினான் - திவிட்டன் சிங்கத்தை வாய்பிளந்த செய்தியைக் கூறலானான், ஆங்கு -
அவ்விடத்தே, பெரியதோர் வியப்புச் சென்றது - அவ்வவையில் மிகப் பெரியதொரு வியப்பு
உண்டாகியது,(எ - று.) 

அரியது கேட்க என்ன அரிகேது பேசினான்; அங்கு அவையில் வியப்புச் சென்றது
என்க.

( 7 )