1143. அடுகுர லரச சீய மதனையோ ராம1பற் றாள்போல்
நொடிவரை யளவிற் கீறி நுனித்தது வியத்தல் 2செல்லாக்
கடிவரை யலங்கன் மார்பிற் காளையே பெரிய னென்று
தடவரை யனைய தோளான் றன்னுளே வியந்து நின்றான்.

     (இ - ள்.) குரல் அடு அரசசீயம் அதனை - தன் முழக்கத்தாலேயே பிற வுயிர்களைக்
கொல்லும் ஆற்றலுடைய அரச சிங்கத்தை, ஓர் ஆம்பற்றாள் போல் - ஓர் ஆம்பல்
மலரின் நாளத்தைப் பிளப்பதுபோல், நொடி வரையளவில் கீறி - ஒரு மாத்திரைப் போதில்
பிளந்து, நுனித்து - அழித்து, அது வியத்தல் செல்லா - மேலும் அவ்வருஞ் செயலை
வியத்தலும் செய்யாத, கடிவரை யலங்கல் மார்பன் - மணம் கமழும் மாலையணிந்த மலை
போன்ற மார்பையுடையவனாகிய, காளையே பெரியன் என்று - திவிட்டநம்பியே ஆற்றலால்
யாரினும் பெரியவனாவான் என்று, தன்னுளே வியந்து நின்றான் - தன் நெஞ்சினுள்ளே
வியப்படைந்து நின்றான், தடவரை அனைய தோளான் - பெரிய மலையை ஒத்த
தோள்களையுடைய அரிகேது, (எ - று.)

     நுனித்தல் - ஈண்டு அழித்தல் என்னும் பொருளின் மேனின்றது. இதனுள் அரிகேது
நகை கொண்டதற்கு ஏதுக் கூறப்படுகின்றது. தன் முழக்கத்தாலேயே பிறவுயிரை
மாய்க்கவல்ல அரிமாவை, ஆம்பல் நாளத்தைப் பிளக்கும் அத்துணை எளிமையிற் பிளந்த
நம்பியே, ஆற்றலில் யாரினும் பெரியன்; அச்சுவகண்டன் அறியாமையாற் சினந்தான்;
என்று, இவன் அறியாமையையும் நம்பியின் பெருந்தகைமையையும் வியந்தான், என்க.

( 13 )