அரிகேது தன்னுள் துணிதல்

1144. இன்றிவ னனலும் போழ்தி னெதிர்நின்று கனற்றி யென்னை
சென்ளறவ னாற்ற றானே கண்டபின் றேறு மன்றே
என்றுதன் மனத்தி னெண்ணி 3யியைந்தவா முகமன் சொல்லிக்
குன்றுடை யரசன் முன்னைக் கூப்பிய கைய னானான்.
     (இ - ள்.) இன்று - இப்போது, இவன் அனலும் போழ்தின் - இவ் வச்சுவகண்டன்
அறியாமையால் சினக்குங்கால், எதிர் நின்று கனற்றி என்னை - இவன் எதிரே நின்று
இவன் சொற்கு எதிர் மொழிந்து இவனை மேலும் வெகுள்விப்பதனால் பயன் என்னை,
அவன் ஆற்றல் - அத்திவிட்டனுடைய பேராற்றலை, தானே சென்று கண்டபின் - தானே
நேரில் அவன் முன்னர்ச் சென்று அறிந்த பின்னரேனும், தேறும் அன்றோ - தானே
தெளிந்து கொள்வான் அல்லனோ, என்று தன் மனத்தின் எண்ணி - என்று தன்
நெஞ்சினுள் நினைத்து, இயைந்தவா முகமன் சொல்லி - அப்பொழுது அவ்
வச்சுவகண்டனுக்குப் பொருந்துமாற்றானே முகமன் மொழிகளைப் பேசி, குன்றுடை அரசன்
முன்னை - மலை மன்னனாகிய அவ் வச்சுவகண்டனுக்கு முன்னர், கூப்பிய கையன்
ஆனான் - கைகூப்பித் தொழுவானாயினான், (எ - று.)

அவ்வாறு வியந்த அரிகேது, காணாதாற் காட்டுதல் பயமின்றாம், நம்பியின் ஆற்றலை
இவன் நேரிற் காணும்போது அறிக! யாம் கூறின், இவனைக் கனற்றுவதன்றி, தேற்றுதலாகாது
என்று கருதிச் செவ்விக்கேற்பக் கைதொழுது அமையயலானான் என்க.

          “காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
          கண்டானாம் தான்கண்ட வாறுÓ

     என்னும் திருக்குறட் கருத்தை அரிகேது, நினைந்தான் போலும்.

( 14 )