(இ - ள்.) அடிகள் இவ்வவனி தன்மேல் இழிந்ததும் - பெரியீர் இப் போதன நகரத்தே வந்து இறங்கியதும், அணங்கோடு ஒப்பாள் - தெய்வமகள் போன்ற சுயம்பிரபையின், கடிவினை நிலையும் - திருமண நிகழ்ச்சியின் தன்மையும், கண்டு வந்து ஒருவன் அன்றே கூற - பார்த்து வந்து ஓர் ஒற்றன் அந்நாளிலேயே அச்சுவகண்டனுக்குக் கூறினானாக, சுடுசொல் இஃது ஒழிக என்று - அவன் என் செவிகளைச் சுட்டொழிக்கும் இக் கொடுஞ்சொல்லை இனிக் கூறாதொழிக என்று கூறி, துணைச்செவி புதைத்து - இரு செவிகளையும் கைகளாலே பொத்திக்கொண்டு, முடிமுதல் துளங்கத் தூக்கி - முடியின்கண் அசைவுண்டாகத் தன் தலையை நிமிர்த்து, முனிவினை முடிவு கொண்டான்-வெகுளியின் எல்லையை யடைந்தான், (எ - று.) முனிவினை - வெகுளி. மற்றோர் ஒற்றன், இப்போதனத்தே நிகழ்ந்த நங்கை திருமண நிலையும், பிறவும் அன்றே கூற, அச்சுவகண்டன் செவி புதைத்து, இத்தகைய சுடுசொல்லை இனி யான் பொறேன்! ஒழிக என்று, எல்லைகடந்து வெகுண்டான், என்க. |