1149. | அனன்றனன் றவைகள் பேசி யமையுமவ் வரசர் தீமை மனங்கொளப் படுவ தாயின் மணிவரை யுலகின் வாழுஞ் சனங்களைத் திரட்டிப் பின்னைத் தக்கதொன் றறிவ னென்றான் சினங்கெழு காலன் மற்றோர் காலன்மேற் 3சிவந்த தொப்பான். | (இ - ள்.) சினங்கெழு காலன் - வெகுளி பொருந்திய மறலி, மற்றோர் காலன்மேல் சிவந்தது ஒப்பான் - வேறேயொரு மறலியின்மேல் வெகுண்டதை ஒப்பவனாகிய அச்சுவகண்டன், அனன்று அனன்று அவைகள் பேசி - சினந்து சினந்து அத்தகைய மொழிகளைப் பேசி, அமையும் - அமைவதாக, அவ்வரசர் தீமை மனங்கொளப்படுவதாயின் - அவ்வேந்தர்கள் நமக்கியற்றியுள்ள தீங்குகள் நம்மால் பொருளாகக்கொள்ளப்படுவன ஆனால், மணிவரை யுலகின் வாழும் - இவ்விரத்தின பல்லவம் என்னும் மலையுலகிலே வாழுகின்ற, சனங்களைத் திரட்டி - மக்களை ஒருங்கே கூட்டிவைத்து, பின்னைத் தக்கது ஒன்று அறிவன் என்றான் - பின்னர் அவ்வேந்தர்க்கு மாறாகச் செய்யத்தகுந்ததொன்றை ஆராய்ந்து காண்பன் என்றான், (எ -று.) என்கோற் கீழ்வாழ்வாரை ஒருங்கே கூட்டி, அவருடன் ஆராய்ந்து, என் பகைவர் செய்த தீமைக்குத் தக்க மாறு காண்பல் என்றான், என்க. | ( 19 ) | | |
|
|