வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்

115. விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகள்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலாள்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
1அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே.
 
     (இ - ள்.) அம் வஞ்சிகொடி இடை - அழகிய வஞ்சிக் கொடியைப் போன்ற
இடையையும்; மயில்அம் சாயலாள் - மயில் போன்ற அழகிய சாயலையுமுடையவளாகிய;
விஞ்சையர் உலகுடை வேந்தன் தன் மகள் - வித்தியாதர உலகத்தைத் தனக்கு
உரிமையாகவுடைய அரசனின் மகள்; எஞ்சல்இன்று - யாதொரு குறைவுமில்லாமல்;
இயங்கிவந்து இழியும் ஆய்விடில் - திவிட்டனுக்கு மனைவியாக முடிவு செய்யப்
பெற்றுவந்து பொருந்துவாளானால்; அவ்வுலக ஆட்சி - அவ்வித்தியாதரவுலகின் கண்ணும்
நம் உலகத்தின் அரசாட்சியானது; அஞ்சிநின்று - பகைவர் அஞ்சி நிற்கும்படி அமைந்து;
செல்லும் - நமக்கு நன்றாக நடைபெறும். (எ - று.)

     வித்தியாதர மங்கை நம் திவிட்டனுக்கு மனைவியாக அமைவாளானால், நம்
பகைவர்களும் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள். நமக்கு இவ்வுலக ஆட்சியே அன்றி
அவ்வுலக ஆட்சியும் கைகூடும் என்பது கருத்து. ஆட்சியும் எனல் வேண்டிய உம்மை
விகாரத்தாற் றொக்கது. “சாயல் மென்மை“ என்னுந் தொல்காப்பியத்தால் சாயல் என்பது
மெய்வாய் கண் மூக்குச்செவி என்னும் ஐம்பொறிகட்கும் புலனாகின்ற ஐவகை
மென்மைகளையும் உணர்த்தும் உரிச்சொல்லாகும். அஞ்சி நின்றென்புழிச்
செய்தெனெச்சத்தைச் செயவெனச்சமாக்குக.
 

( 46 )