(இ - ள்.) என்று அவர் மொழிந்தபின் - மேற்பாட்டில் முடித்தாங்கு அமைச்சர்கள் கூறிய பிறகு; இலங்கு பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களை யணிந்த பயாபதி மன்னன்; அது பெரிதும் நன்று என்று அருளி - நீங்கள் கூறியாங்குப் புரிதல் மிகவும் நல்லது என்று கூறி; நாள்தொறும் சென்று அவன் காக்க என மொழிந்து - தினந்தோறும் துருமகாந்தன் சென்று பொழிலைக் காக்கக்கடவன் என்று கட்டளையிட்டு; தேங்குழல் இன்துணையவர்கள் தம் கோயில் எய்தினான் - தேன் பொருந்திய கூந்தலையுடைய இனிய துணைவிமார்களின் இருப்பிடத்தை யடைந்தான். (எ - று.) புட்பமாகரண்டம் என்னும் பொழிலில் துருமகாந்தன் என்பவனைக் காவல் வைத்தற்கு முழுமனதுடன் இணங்கிய மன்னவன், அவ்வாறே செய்யுமாறு பணித்துவிட்டுத் தான் அந்தப்புரத்தையடைந்தான். |