அச்சுவகண்டன் சினந் தணிதல்

1173. வேறுவே றாகி நின்று வெஞ்சினஞ் செருக்கி விஞ்சைக்
கேறனான் றம்பி மாரு மக்களு மின்ன போல்வ
கூறினார் கூற லோடுங் குரையழ லவிவ தேபோல்
ஆறினா னென்னை செய்யு 3மாயபண் பதுவ தானால்.
     (இ - ள்.) விஞ்சைக்கு ஏறு அனான் - வித்தியாதரருலகிற்குச் சிங்கத்தை ஒத்த
அச்சுவகண்டன், தம்பிமாரும் மக்களும் - தன் தம்பியரும் மக்களுமாவார், வேறு வேறாகி
நின்று - வெவ்வேறாய்த் தனித்து நின்று, வெஞ்சினம் செருக்கி - வெவ்விய வெகுளியால் செருக்கடைந்து, இன்ன போல்வ கூறினார் - இன்னோரன்ன மறவுரைகளைக் கூறினாராக, கூறலோடும் - அவர் அவ்வாறு கூறியவுடன், குரை அழல் அவிவதேபோல் - ஓசையுடைய நெருப்பு (மழையால்) அவிவதைப் போன்று, ஆறினான் - சினம் தணிந்தான், ஆய பண்பு அது - அவர்கள் மொழியினாலாய பண்பாகும் அது, அது ஆனால் - அங்ஙனமானால், என்னை செய்யும் -ஆறாதே அவ்வச்சுவகண்டன் பிறிது யாதுதான் செய்வன், (எ - று.)

அப்பொழுது ஆறுவதே அவன் பண்பிற்கொத்ததா யிருத்தலின் ஆறினான் எனினுமாம்.
அச்சுவகண்டன், தன் தம்பியரும், மக்களும் கூறிய மறவுரைகளைக் கேட்டுச்
சினந்தணிந்தான், என்க.

( 43 )