(இ - ள்.) மேககூட அணிநகர் - அதனையாண்டு அரிய செய்கை துணிபவன் - மேககூடம் என்னும் அழகிய நகரத்தை ஆள்பவனும், ஆராய்ந்து காண்டற்கரிய செயல்களைத் தன் மதி நுட்பத்தால் ஆராய்ந்து தெளியவல்லவனும் ஆகிய, தூமகேது - தூமகேது என்பவன், சூழ்ந்தனன் - ஆராய்ந்து, சொல்லலுற்றான் - சொல்லத் தொடங்கினான், மணிவரைப் பிறந்து மாண்ட அருங்கலம் - அழகிய மலையிடத்தே தோன்றி மாட்சிமைப்பட்ட பெறற்கரிய அருங்கலம் ஒன்றனை, மன்னர் கோமான் பணிவரை அன்றி - நம் அரசர் பெருமானாகிய அச்சுவகண்டனுடைய அணிகலனுடைய மலைபோன்ற மார்புபெறுவதல்லது, யாரே பெறுபவர் பகர்மின் என்றான் - பிறர் யாவரே அடைதற்குரியார் ஆவார், ஆராய்ந்து கூறுங்கள் என்றான், (எ - று.)பணிவரை - அணிகலன்களையுடைய மலைபோன்ற மார்பு. தூமகேது அரிமஞ்சு வினாவைப் பின்பற்றிக் கூறுகின்றவன், வரையுலகத்தே பிறந்து மாண்புடைத்தாகிய அருங்கலம் ஒன்று அவ் வரையாளும் மன்னன் மார்பிற்கன்றி வேறு யார்க்குரித்தாம் கூறுங்கோள் என்றான் என்க. “அருங்கலம்Ó என்றது சுயம்பிரபையை. |