அங்காரவேகன் மறவுரை

1177. 1வரைதன்மேற் றழலின் பேரார்
     வளநக ரதனை யாளும்
அரசனங் கார வேக
     னதனைக்கேட் 2டழன்று 3சொல்வான்
இரதநூ புரத்தை யாள்வா
     னிகழ்ந்தனன் பெரிது நம்மைப்
பொருத 4வன் கிளையை முந்நீர்ப்
     புறங்கரைப் படுத்து மென்றான்.
     (இ - ள்.) வரை தன்மேல் தழலின் பேரார் வளநகர தனை ஆளும் - இமயமலையின்
மேலேயுள்ள அனலபுரம் என்னும் பெயர் பொருந்திய வளமிக்க நகரத்தை ஆள்பவனாகிய,
அரசன் அங்காரவேகன் - அரசன் அங்காரவேகன் என்பவன், அதனைக்கேட்டு -
தூமகேதுவின் மொழியைக் கேட்டு, அழன்று சொல்வான் - வெகுண்டு கூறுவான்,
இரதநூபுரத்தை ஆள்வான் - இரதநூபுரச்சக்கிரவாளத்தை ஆள்கின்றவனாகிய சுவலனசடி
மன்னன், நம்மைப் பெரிதும் இகழ்ந்தனன் - நம்மை மிகமிக இகழ்ந்தவனாயினன் ஆதலால்,
பொருது - அவனுடனே போர் செய்து, அவன் கிளையை - அவனுடைய உறவினர்களை,
முந்நீர் புறங்கரைப்படுத்தும் என்றான் - கடலின் அப்புறக்கரையிலே செல்லும்படி செய்யக்
கடவேம் என்று இயம்பினான், (எ - று.)

சுயம்பிரபை யார்க் குரியள்? என்று தூமகேது வினாவியவுடன், அங்காரவேகன் பெரிதும்
அழன்று, சடியரசன், அவ்வருங்காலத்தைத் தகுதியுடைய நம் மரசனுக்கு அளிக்காமல்,
ஈனமானிடனுக்கு ஈந்தவாற்றால், நம்மைப் பெரிதும் இகழ்ந்தவன் ஆயினான், ஆதலால்,
அவனைப் பொருது கொன்று, அவன் கிளையையும் கடற்கப்புறத்தே போக்குதும் என்றான்,
என்க.

( 47 )