அரிசேனன் மறவுரை

1178. மல்லினான் மலர்ந்த மார்பீர்
     மறைந்துநா மிருந்து வல்ல
சொல்லினால் வெல்ல 1லாமேற்
     சொல்லுமி னின்னு 2மன்றி
வில்லினால் விரவு தானைச்
     செருவினுள் வீரந் தன்னால்
வெல்லலா மென்னி னென்னை
     விடுமின்போய்ப் பொருவ லென்றான்.

     (இ - ள்.) மல்லினால் மலர்ந்த மார்பீர் - மற்போர் பயின்று அகன்ற
மார்பினையுடையவர்களே, நாம் மறைந்து இருந்து - நாம் நம்மரணுள் ஒளிந்து
வதிந்தபடியே, வல்லசொல்லினால், வெல்லலாமேல் - வன்மையுடைய சொற்களைப்
பேசுந்துணையானே நம் பகைவரை வெல்லக்கூடுமேல், இன்னும் சொல்லுமின் - மேலும்
எத்துணையும் பேசுங்கள், அன்றி - அவ்வாற்றான் அல்லாமல், வில்லினால் விரவுதானைச்
செருவினுள் - விற்படையோடு கலத்தலையுடைய போரின்கண்ணே, வீரந்தன்னால் -
மறத்தாலேதான், வெல்லலாம் என்னில் - பகைவரை வெல்லுதல்கூடும் என்பது
இயல்பானால், என்னைவிடுமின் - என்னைப் போர் ஆற்றுதற்குச் செல்ல விடை
தரக்கடவீர், போய்ப் பொருவல் என்றான் - யானேபோய்ப் போர் செய்வேன் என்றான்,
 (எ- று.)

அங்காரவேகன், மார்பீர்! சொல்லால் வெல்லலா மென்னில், இன்னும் சொல்லுமின்;
வில்லாலே வெல்லலாம் என்னின், எனக்கு விடைதம்மின்; யான்போய்ப் பொருவல்
என்றான், என்க.

( 48 )