துருமகாந்தன் பொழிலையடைதல் |
118. | எரிபடு 1விரிசுட ரிலங்கு பூணினான் திருவடி 2தொழுதுசெல் துரும காந்தனும் வரிபடு மதுகர முரல வார்சினைச் சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான். |
(இ - ள்.) எரிபடுவிரிசுடர் - நெருப்பைப்போல ஒளியை விடுகின்ற; இலங்கு பூணினான் - விளங்குகின்ற அணிகலன்களையணிந்த பயாபதி மன்னனின்; திருவடிதொழுதுசெல் - அழகிய அடிகளைப் பணிந்து செல்கின்ற; துருமகாந்தனும் - துருமகாந்தன் என்பவனும்; வரிபடு மதுகரம் முரல - கோடுகள் பொருந்திய வண்டுகள் ஒலிக்கும்படி; வார்சினை - நீண்ட கிளைகளிலே; சொரிபடு - சொரிகின்ற; மது - தேன் பொருந்திய; மலர்ச்சோலை நண்ணினான் - மலர்கள் நிறைந்த புட்பமாகரண்டம் என்னும் பொழிலை யடைந்தான். (எ - று.) அரசன் துருமகாந்தன் என்பவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு அந்தப்புரத்தையடைந்தான். அரசன் கட்டளையைப் பெற்ற துருமகாந்தன் அரசனைத் தொழுது காவலை மேற்கொண்டு பூம்பொழிலை யடைந்தான். |
( 49 ) |